Tamil Sanjikai

மகராஷ்டிர மாநிலம் மும்பையின் தெற்குப்பகுதியில் கடற்கரையை ஒட்டி நீரவ் மோடிக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு பங்களா ஒன்று அமைந்துள்ளது.

33,000 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் பரந்து விரிந்து அமைந்துள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம், விலையுயர்ந்த பொருட்கள், சொகுசு தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி கட்டப்படாதது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு தனியார் அமைப்பு ஒன்று இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கடற்கரை விதிகளை பின்பற்றி கட்டப்படாத சொகுசு விடுதிகள், பங்களாக்கள், தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதன்படி இந்த கட்டடங்களை இடிக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் நீரவ் மோடியின் சொகுசு விடுதியும் அடங்கும். இருப்பினும் இந்த கட்டடத்தின் மிகவும் சக்திவாய்ந்த கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருந்ததால் இதனை வழக்கமான முறையில் இடித்துத்தள்ள நீண்ட் காலம் தேவைப்படும் என முடிவானது. இதனால் வெடி வைத்து இந்த கட்டடத்தை தகர்க்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த பங்களாவின் பில்லர்களில் துளையிடப்பட்டு, அதிகளவிலான வெடி பொருட்களை பயன்படுத்தி இக்கட்டடம் தகர்க்கப்பட்டது. இந்த சொகுசு பங்களா தகர்க்கப்பட்ட போது எந்த வித சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சூர்யவன்ஷி தெரிவித்தார்.

0 Comments

Write A Comment