Tamil Sanjikai

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ரூபாய் .400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். ஜிசாட்-29 விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து ,விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, இந்தியா தயாரித்துள்ள ஜிசாட் 29 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி எஸ் எல் வி மார்க் 3 டி 2 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது. இஸ்ரோவின் திறமை வாய்ந்த பணியாளர்களால் தான் இது சாத்தியமானது. இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட சேட்டிலைட் இது தான்.

இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும். வடகிழக்கு பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தவும் இது உதவும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட இருக்கிறது. மேலும், வரும் 2020-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment