சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த ஆளும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ, தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் அரசுப்பேருந்தில் ஏறிச்சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தெந்தலூரு தொகுதியின் எம்.எல்.ஏவும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருமான சிந்தாமனேனி பிரபாகர், காரில் தனது குடும்பத்தினருடன் விஜயவாடா நோக்கி நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
குண்டூர் மாவட்டத்தின் காஸா சுங்கச்சாவடிக்கு அவரது கார் வந்த போது அங்கிருந்த அலுவலர் சுங்கக்கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். சிந்தாமனேனி பிரபாகர் பயணித்த கார் பதிவெண் இல்லாமலும், எம்.எல்.ஏவுக்கான ஸ்டிக்கர் இல்லாமல் இருந்ததாலும், தான் எம்.எல்.ஏ என கூறியபோதும், கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும் என அலுவலர் வற்புறுத்தியுள்ளார். இருதரப்பிலும் தங்களது நிலையில் உறுதியாக இருந்ததால் விரக்தியடைந்த எம்.எல்.ஏ சிந்தாமனேனி பிரபாகர், தனது காரை அங்கேயே நிறுத்திட்டு அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தில் தனது குடும்பத்தினருடன் ஏறிச்சென்றார்.
பின்னர் காஸா சுங்கச்சாவடியின் உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து எம்.எல்.ஏ புகார் அளித்ததை தொடர்ந்து, பிரச்சனையை அதற்கு மேலும் வளர்க்க விரும்பாத சுங்கச்சாவடி நிறுவனத்தினர், அலுவலர் வாகனத்தின் நம்பர் பிளேட் மற்றும் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் இல்லாததால் தான் இத்தவறு நிகழ்ந்ததாகவும், நடந்தவற்றிற்காக மன்னிப்பு கோருவதாக எம்.எல்.ஏவிடம் கூறியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. நாடுமுழுவதிலுமுள்ள சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது இது போன்ற பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறுவது வாடிக்கையாக மாறிவருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments