Tamil Sanjikai

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா தெரிவித்துள்ளார்.

விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா இந்திய விமானப்படையின் சாதனை வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அபிநந்தன் சென்ற மிக்-21 போர்விமான தகவல் தொடர்பை பாகிஸ்தான் துண்டித்ததா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இந்திய போர் விமானங்கள் பாதுகாப்பாக தகவல் தொடர்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அனுப்பும் தகவல்களை யாரும் கேட்க இயலாத வகையில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊடுருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பதாரியா தெரிவித்தார்.

மேலும், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்தியாவின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், போர்விமானம், ஹெலிகாப்டரை தவறுதலாக சுட்டுவீழ்த்தாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா கூறியுள்ளார்.

விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா வெளியிட்ட இந்திய விமானப்படையின் சாதனை வீடியோவில் பாலகோட் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment