Tamil Sanjikai

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மாறன் சகோதரர்களின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கின் விசாரணை, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்பட இருப்பதால், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை என மாறன் சகோதரர்கள் தரப்பில் கூறப்படுவது தவறானது என்றும், விசாரணை நீதிமன்றம் திருப்தி அடைந்தததால்தான் குற்றச்சாட்டு பதிவுக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் குற்றச்சாட்டு பதிவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயம் என்பதால், விலக்கு அளிக்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார். குற்றச்சாட்டு பதிவு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஆணை பிறப்பிப்பது வழக்கு விசாரணையின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகி விடும் என்றும், வழக்கை மேலும் பின்னோக்கி கொண்டு சென்றுவிடும் எனவும் நீதிபதி கூறினார். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவு உட்பட, வழக்கு தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் நாளை கட்டாயம் ஆஜராகுமாறும் நீதிபதி ஆணையிட்டார்.

0 Comments

Write A Comment