Tamil Sanjikai

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

பாரிக்கரின் உடல் இன்று காலை பானாஜி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிக்கருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன. இறுதிச்சடங்கு முடிந்ததும் மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

மனோகர் பாரிக்கரின் உடல் அங்குள்ள மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்படுகிறது. கோவா மாநிலத்தின் முதல் முதல்வரான தயானந்த் பந்தோட்கர் நினைவகத்தை ஒட்டி மனோகர் பரிக்கர் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிக்கர் மறைவுக்கு இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கோவா மாநில அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment