மராத்தி புத்தாண்டையொட்டி தாதர் சிவாஜி பார்க்கில் கடந்த 6-ந் தேதி நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களை நவநிர்மாண் சேனாவினர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டனர்.
அந்த படங்களுக்கு கீழ் காட்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்த விஜய் வாரே என்பவர் ராஜ்தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த நவநிர்மாண் சேனாவினர் விஜய் வாரேயின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து அவரை தாக்கினர். மேலும் ராஜ்தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வைத்து தோப்புக்கரணமும் போட வைத்தனர்.
இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ராஜ்தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக விஜய் வாரே மீது பந்த் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் அவரை தாக்கிய நவநிர்மாண் சேனாவினர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதுபற்றி பந்த் நகர் போலீசாரிடம் கேட்ட போது, நவநிர்மாண் சேனாவினருக்கு எதிராக புகார் எதுவும் வரவில்லை என்றனர்.
அண்மையில் தானே மாவட்டம் ரபோடி பகுதியில் ராஜ்தாக்கரே பற்றி வாட்ஸ்-அப்பில் சர்ச்சை கருத்தை பகிர்ந்த பா.ஜனதா தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
0 Comments