தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதன்படி, ஃபானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 200 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீசியதுதந். பலத்த மழையும் பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. புயலின் கோர தாண்டவத்தால், பல இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பூரி நகரின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. ஒடிசாவில் உள்ள 14 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. ஏறக்குறைய 3 மணி நேரம் கோர தாண்டவம் ஆடிய புயல் கரையை கடந்தது.
ஒடிசாவில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர தொடங்கியுள்ளது. இன்று இரவு 8.30 மணிக்கு மேற்கு வங்கத்தை ஃபானி புயல் தாக்குகிறது. மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது அடுத்த 48 மணி நேரத்திற்கான அனைத்து பிரசார பயணங்களை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகளை மம்தா பானர்ஜி கண்காணிக்க உள்ளார்.
0 Comments