Tamil Sanjikai

பாஜக எம்.எல்.ஏ. திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் அனில் கோடே. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், துலே தொகுதி எம்எல்ஏ.வான அனில் கோடே தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், மகாராஷ்டிரா சட்டசபை குளிர்கால நவம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. அன்று சபாநாயகரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்.

துலே தொகுதியில் நகராட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் எனது எதிர்ப்பை மீறி குற்றப் பின்னனி கொண்ட நபர்களை பாஜக மூத்த தலைவர்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். அவர்கள் நகராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டால் நகராட்சி வீழ்ச்சியை நோக்கி செல்லும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தான் நாக்பூரின் கடோல் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் தேஷ்முக் தனது பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment