Tamil Sanjikai

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த மேத்யூ தாமஸ், இன்று திடீர் என பதவியை ராஜினாமா செய்துள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான கேரள அமைச்சரவையிலிருந்து கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சரான மேத்யூ டி தாமஸ் பதவி விலகியுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி சார்பில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேத்யூ தாமஸ்.

இவர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம், தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார். மேத்யூ தாமஸ் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கிருஷ்ணன்குட்டி புதிய நீர்வளத்துறை அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டத்தில், அமைச்சர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment