Tamil Sanjikai

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் சந்திரன். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டார்.

இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) உறுப்பினர்களுக்கும் மற்றும் பிற மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அகில் எஸ்.எப்.ஐ. அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். இதனை அடுத்து அகில் உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் வேறு 3 மாணவர்களும் காயமடைந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் ஒன்றாக திரண்டு கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கே.எஸ்.யூ., எம்.எஸ்.எப்., ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின் அடையாளம் தெரியாத 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) 43 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், ஆளும் சி.பி.எம். கட்சியின் மாணவர் அமைப்பு எஸ்.எப்.ஐ. மீது குற்றச்சாட்டு கூறி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பின் பயங்கர முகம் மீண்டுமொரு முறை வெளிப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு பாசிசம் அடிப்படையில் செயல்படுகிறது. பிற மாணவர் அமைப்புகளை செயல்பட விடாமல் தடுப்பதுடன், தனது சொந்த அமைப்பு உறுப்பினர்கள் மீது கூட தாக்குதல் நடத்தும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பா.ஜ.க. கேரள தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், மாணவர்கள் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment