கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையின் போது சன்னிதானத்தில் பக்தர்களை கண்காணிக்க இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோரைக் கொண்ட மூன்று நபர் குழுவையும் நியமித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 2 மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும் சூழலில் சபரிமலையில் எந்தவிதமான போராட்டமும் நடைபெறக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுகளை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர் ராமசந்திரமேனன் மற்றும் என். அனில்குமார் கொண்ட அமர்வு சபரிமலை சன்னிதானம் போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல. அங்கு எந்த போராட்டமும் நடைபெறக்கூடாது. மேலும் சன்னிதான வளாகத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு தடையில்லை என்று தெரிவித்துயுள்ளனர். பெண்களை சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரச்சினை இல்லாமல் சுமுகமான முறையில் இதனை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments