Tamil Sanjikai

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. 58 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழை மற்றும் நிலச்சரிவுக்கு வயநாடு மாவட்டத்தில் 10 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 19 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 5 பேர், இடுக்கி மாவட்டத்தில் 4 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 3 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 58 பேர் பலியானார்கள். நேற்று காலை மேலும் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நிலாம்பூர் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா என்ற இடத்தில் ஏற்கனவே 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், (ஆக.,11) 2 பேரின் சடலங்களும், வயநாட்டின் புத்துமலா என்ற இடத்தில் ஏற்கனவே 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

இருப்பினும், இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1.65 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இடுக்கி அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதல்–மந்திரி பினராயி விஜயன், நேற்று உயர் அதிகாரிகளுடன் வெள்ள மீட்புப்பணி குறித்து ஆலோசனை நடத்தினார். மாநிலம் முழுவதும் 1,551 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment