Tamil Sanjikai

காஷ்மீர் வழி பாக்-சீனா போக்குவரத்து, இந்தியா கடும் எதிர்ப்பு!

பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்கு இடையே எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக மட்டுமே சீனா எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேதான் எல்லைத்தொடர்பு இருந்தது. பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை தொடர்பு தடைபட்டுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பகுதியான ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கர் நகரில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பேருந்து சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார சனிக்கிழமை முதல் இந்த பேருந்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்ததாவது, பாகிஸ்தான் - சீனா பொருளாதார பாதை என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் - சீனா இடையே பேருந்து சேவை தொடங்கும் திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை முன் வைத்துள்ளது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பாகமாகும். 1963-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சீனா - பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் சட்ட விரோதமானது. இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக எந்த வகையான போக்குவரத்து சேவை மேற்கொண்டாலும் அது, இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறும் செயலாக இருக்கும் என்று தெரிவித்தார்.

0 Comments

Write A Comment