Tamil Sanjikai

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை வைக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். மாண்டியா மாவட்டத்தில் ரூ.1,200 கோடி செலவில் காவிரி தாய்க்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி ஆறானது, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது.

இந்நிலையில் காவிரி ஆறு மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையில் இந்த சிலை நிறுவப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், இந்த அருங்காட்சியகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு தோற்றத்தை பார்வையிடும் வகையில், சுமார் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளனர். தனியார் மற்றும் பொது அமைப்பின் பங்களிப்புடன் காவிரி தாய்க்கு சிலை நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் வருகை கர்நாடகாவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment