Tamil Sanjikai

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல மராத்திய மொழி செய்தி நிறுவனமான லோக்மட், நாடாளுமன்றத்தில், சிறந்து பணியாற்றும் எம்.பிக்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவிக்கும். அந்த அடிப்படையில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி பெயரும் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் ஜோஷி தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, 2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழியை தேர்வு செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி நாடாளுமன்றத்தில் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த குழு தெரிவித்தது.

டிசம்பர் 13ம் தேதி டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற உள்ள விழாவில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார். திமுக எம்.பி கனிமொழி சிறந்த பெண் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment