தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக இருப்பவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது. அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிபதியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் அவருக்கு தெலுங்கானா மற்றும் மும்பையில் பல சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது. நீதிபதி வரபிரசாத் ஊழலில் ஈடுபட்டு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது.
இந்த பணத்தை மும்பை தானேவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் நண்பரிடம் கொடுத்து அதில் முதலீடு செய்திருக்கிறார். தனது குடும்பத்துடன் அடிக்கடி சீனா, அமெரிக்கா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று லட்சக் கணக்கில் செலவு செய்து வந்திருக்கிறார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று தெலுங்கானாவில் உள்ள நீதிபதி வரபிரசாத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மும்பை தானேவில் உள்ள அவரது நண்பரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஐதராபாத்தில் சுக் நகரில் உள்ள வீட்டில் வைத்து நீதிபதி வரபிரசாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து நீதிபதி வரபிரசாத் கஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார்.
0 Comments