சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்த கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவின் கம்பீரமான மற்றும் கறாரான போக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான யதீஷ் சந்திரா, கடந்த 2015-ஆம் ஆண்டு கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் கேரளாவின் ஆளும் கட்சியாக காங்கிரசும், எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தன. அப்போது ஆளும் அரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் ஒன்றில் தடியடி நடத்தி யதீஷ் சந்திரா பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனால் "பைத்தியக்கார நாய்" என்ற வசவுக்கும் ஆளானார்.
அப்போது அவருக்கு ஆதரவாக பாஜகவினர் குரல் கொடுத்தனர். இந்நிலையில்தான் கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் எஸ்பியாக யதீஷ் சந்திரா பொறுப்பேற்றார். அப்போது, எல்.பி.ஜி குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றம் முன்பு ஒரு போராட்டடம் வெடித்தது. அந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர். அப்போதும் யதீஷ் சந்திரா தடியடி நடவடிக்கையை மேற்கொண்டார்.. அந்த சம்பவம் வழக்காக தொடரப்பட்டு இன்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால், ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு அழைப்பு விடுக்கபட்டவர் இந்த யதீஷ் சந்திரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாத சம்பவம் நடைபெற்றது. அப்போது, ஐபிஸ் அதிகாரி யதீஷ் சந்திராவுக்கு பலத்த ஆதரவு கிளம்பியது. இந்தநிலையில் சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை தடுத்த யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் காவல் ஆணையராக யதீஷ் சந்திராவை இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments