Tamil Sanjikai

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் நகருக்கு விமானங்கள் வந்து சென்றன. அதன் பின்னர் இந்த பகுதிக்கு நேரடியாக விமானச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இங்குள்ள மாட்டானூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு 17-12-2010 அன்று அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இந்த சர்வதேச விமான நிலையத்தை முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கண்ணூரையும் சேர்த்து இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்களை கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு இன்று காலை 10.13 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானத்தை சுரேஷ் பிரபுவும், பினராயி விஜயனும் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

கண்ணூர் விமானநிலையம் ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலைய திறப்பு விழாவில், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் மேலாண்மை இயக்குநர் துளசிதாஸ், அமைச்சர்கள் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, சந்திரசேகரன், ஷைலஜா, சசீந்திரன் மற்றும் எம்பிக்கள் ஸ்ரீமதி, ராகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

0 Comments

Write A Comment