Tamil Sanjikai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது வரும் ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் 22-ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

அதுவரை ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடையில்லை என்றும், அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனவரி 22 ஆம் தேதி முதல் நீதிமன்ற அறையில் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த புதிய மனுக்களையும், சீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை பரிசீலனை செய்து முடிவு செய்தபிறகு புதிய ரிட் மனுக்களை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment