Tamil Sanjikai

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.

இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும் என நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக சற்று முன் தகவல்கள் வெளியாகியுள்ளன

0 Comments

Write A Comment