புலவாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுகிறது. புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது லேசர் குண்டு மழை பொழிந்து அழித்தன.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்தன. அவற்றை இந்திய விமானப்படை முறியடித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் நீர்மூழ்கிக்கப்பல் தங்கள் கடல் பிரதேசத்தில் நுழைய முயற்சித்ததாகவும், அதை தாங்கள் முறியடித்து விட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை கூறுகிறது.
இதையொட்டி . மார்ச் 4-ந் தேதி இரவு 8.35 மணிக்கு எடுக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது போல் ஒரு படத்தையும் வெளியிட்டது பாகிஸ்தான். இந்த படம் உண்மையானது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி கடற்படை செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் தண்ணீர் பிரதேசத்துக்குள் நுழைய விடாமல், பாகிஸ்தான் கடற்படை அந்த நீர்மூழ்கி கப்பலை தங்கள் சிறப்பான திறன்களை பயன்படுத்தி, வெற்றிகரமாக திருப்பி அனுப்பியது.
பாகிஸ்தான் தனது சமாதான கொள்கையை நிலைநிறுத்தும் வகையில் இந்திய நீர்மூழ்கி கப்பலை குறி வைக்கவில்லை. இந்தியா இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சமாதானத்தை நோக்கி நடை போட வேண்டும்.
பாகிஸ்தான் கடற்படை எப்போதுமே தனது பிரதேச கடற்பகுதியை காக்க தயாராக உள்ளது. எந்தவொரு ஆக்கிரமிப்பு வந்தாலும், பதிலடி கொடுக்கிற திறனையும் பெற்றிருக்கிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இந்திய கடற்படை, தனது கடற்பகுதியில் நுழைய முயற்சித்தது இது இரண்டாவது முறை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் அமைப்பு ரீதியிலான எந்த பயங்கரவாத குழுக்களும் இல்லை என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் கூறினார்.
வாஷிங்டனில் சமாதானத்துக்கான அமெரிக்க இன்ஸ்டிடியூட்டில் அவர் பேசும்போது, புலவாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா நீதிபதியாகவும், தண்டனையை நிறைவேற்றுபவராகவும் செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
0 Comments