Tamil Sanjikai

13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.

அசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து பிற்பகல் 12.25 மணிக்கு ஏஎன்-32 ரக விமானம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுஹா விமான இறங்கு தளத்திற்கு புறப்பட்டுள்ளது.

இந்த ஏ என்-32 விமானத்தில் 13 பேர் பயணித்துள்ளனர். பிற்பகல் 1 மணியளவில், தரைநிலையத்துடனான தகவல் தொடர்பை விமானம் இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில், 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.

சுஹோய்-30 போர் விமானமும், சிறப்பு நடவடிக்கைக்கான சி-130 விமானமும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய தயாரிப்பான ஏஎன்-32 ரக விமானம் இந்திய விமானப் படையால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, படைப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டர்பைன் எஞ்சின்கள் மூலம் உந்துசுழலிகளை இயக்கும் டர்போபிராப் (turboprop) ரகத்தை சேர்ந்த இரட்டை எஞ்சின் கொண்ட ஏன்-32 விமானம் ஒன்று, கடந்த 2016ஆம் ஆண்டில் 29 பேருடன் மாயமானது. 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து போர்ட் பிளேர் சென்ற ஏஎன்-32 ரக விமானம், வழியில் திடீரென ராடார் திரையில் இருந்து மறைந்தது.

அந்த விமானத்தை தேடும் பணிகள், வங்காள விரிகுடாவில் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. கப்பல்கள், நீர்மூழ்கி, விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment