இந்தியா, மதத்தின் அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போதுதான் இப்படியான கருத்தினை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு வழங்கும் முன் நீதிபதி எஸ்.ஆர் சென் விவரிவாக பேசும் போது, “நாடு பிரிவினை அடைந்த போது, லட்சக்கணக்கான சீக்கியர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள், தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவை அனைத்து மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால், இந்தியாவும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் மதச்சார்பின்மை நாடாக உள்ளது.
மேலும், இந்தியா தன்னுடைய சுதந்திரத்தை ரத்தம் சிந்தி அடைந்தது. இந்துக்களும், சீக்கியர்களும் மோசமான பாதிப்பை சந்தித்தனர். அவர்கள் தாங்கள் பிறந்த இடத்தை விட்டு கண்ணீருடன், பயத்துடன் வெளியேற வேண்டியிருந்தது. இதனை நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவிற்குள் வந்த சீக்கியர்களுக்கு இங்குள்ள அரசு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு அப்படி செய்யப்படவில்லை. அதனால், அகிம்சை முறையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது சரியான கருத்து அல்ல. லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்களின் உயிர் தியாகத்தால், உடைமை இழப்பால் உருவானது.
இப்போதும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள் என பல மதத்தினர் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு செல்வதற்கு வேறு இடமில்லை. பிரிவினையின் போது இந்தியாவிற்குள் வந்த இந்துக்கள் இன்னும் வெளிநாட்டவர் போல் பார்க்கப்படுகிறார்கள். என்னுடைய இந்தப் புரிதல் இயற்கை சட்டங்களின் விதிகளுக்கு எதிரானதாகவும், சட்டவிரோதமாகவும் இருக்கலாம். மக்களுக்காக தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன, சட்டங்களுக்காக மக்கள் உருவாக்கப்படுவதில்லை. உண்மையான நிலவரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால்தான் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அதோடு, இந்தியா மற்றொரு பாகிஸ்தான் நாடாக மாறாமல் பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டு பேசினார்.
0 Comments