Tamil Sanjikai

நாட்டின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர், உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் மரங்கள் மீதும், வீடுகள், கட்டிடங்களின் கூரைகளின் மீதும் பனி உறைந்துள்ளது. மலைமுடிகளில் பனி உறைந்துள்ளதால் அவை வெள்ளித்தகட்டால் மூடியதுபோல் காணப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பல இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிர் பிஞ்சால் பகுதியில் நேற்று முன் தினம் ஓரளவு மிதமான பனிப்பொழிவு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அதை ரசித்தபடி வலம் வந்தனர். ஆனால், நேற்று அங்கு கடும் பனி பெய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல், முஹல் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால், இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, சாலைகளும் மூடப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் மலைப்பகுதிகள் வெள்ளித்தகட்டால் மூடியது போல் காட்சியளிக்கின்றன. கேதார்நாத் கோவில் முழுவதும் பனிமூடிக் காணப்படுகிறது. சிம்லா மாவட்டத்தில் குப்ரி என்னுமிடத்தில் கடும் பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பனிப்பொழிவால், குளிர் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். பனியால் பள்ளத்தாக்கு முழுவதும் பஞ்சு படர்ந்துள்ளதுபோல ரம்மியமாக காட்சியளிப்பதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் சாலைகள் மூடப்பட்டதால் பழங்கள் காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீர்பாஞ்சல் மலைத்தொடர் பனிமூடிக் காணப்படுகிறது. இதேபோல் தோடா, பதர்வா ஆகிய பகுதிகளிலும் பனி பெய்து வருகிறது. இது குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முஹல் சாலை கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்துள்ள பழங்கள் காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment