ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவானது இப்பருவகாலத்தில் ஏற்பட்ட முதல் கடுமையான பனிப்பொழிவு என பதிவு செய்யப்பட்டுள்ளது. முகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பனிப்பொழிவால் சாலைகளும் நேற்று மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மரங்கள் மீதும், வீடுகள், கட்டடங்களின் கூரைகளின் மீதும் பனி உறைந்துள்ளது. மலைமுடிகளில் பனி உறைந்துள்ளதால் அவை வெள்ளித்தகட்டால் மூடியதுபோல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்துள்ளனர். வீடுகளின் மேற்கூரைகளில் பனி கொட்டிக் கிடப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் கேதார்நாத் கோவில் முழுவதும் பனிமூடிக் காணப்படுகிறது. சிம்லா மாவட்டத்தில் குப்ரி என்னுமிடத்தில் கடும் பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பனியை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments