Tamil Sanjikai

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளிலும், ரயில் நிலையங்களில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கும் மழைநீர் புகுந்ததையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மும்பையில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஏராளமான ரயில்களும் மும்பை ரயில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மும்பை - புனே இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மும்பை சர்வதேச விமான நிலையமும் நீரில் மூழ்கி இருப்பதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, இதுவரை 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பல இடங்கள் நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான ஓடுபாதை சரிசெய்யப்பட்டால்தான் அந்த விமானங்களை இயக்க முடியும். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் மழை நீடிப்பதால், சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வர இன்னும் 48 மணி நேரம் வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்று காலை வரை மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அடுத்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொடர் மழை காரணமாக பிம்பிரபாடா, கல்யான் ஆகிய இரண்டு இடங்களில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் பலியாகினர். மேலும், இதன் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு மும்பையில் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுவர் இடிந்து விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ.5 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மும்பையில் மட்டும் அடுத்த 3 தினங்களில் 200 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment