Tamil Sanjikai

கேரளாவில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெயது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ள சேதங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னும் முழுமையாக கூட நீங்காத நிலையில், நிகழாண்டும் கேரளாவை கனமழை மிரட்டி வருகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் தற்போது கனமழை கொட்டி வருகிறது.

வயநாடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதிகளில் வசித்த 22,165 மக்கள் 315 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மூடப்படும்.

பத்தினம் திட்டா பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அந்த மாவட்டத்தில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவச தொலைபேசி எண்ணையும் கேரள அரசு அறிவித்துள்ளது. 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டும் கேரளாவில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் மழைக்கு கடந்த இரு நாட்களில் 12 பேர் பலியானதாகவும், அதில் வடக்கு கேரளாவில் மட்டும் 8 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.. ஒட்டுமொத்தமாக மழைக்கு 23 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு கடற்கரை வரை கடற்பகுதி மிகுந்த கொந்தளிப்பாக இருக்கும். 3.2 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை அலை சனிக்கிழமை வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு அரசு உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாவட்டங்களில் மழையால் மோசமான சூழல் நிலவுவதால் அதை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Comments

Write A Comment