Tamil Sanjikai

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலாதீட்சித் காலமானார். அவருக்கு வயது 81.

காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்திற்கு நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலை கவலைக்கிடமானது. இதை அடுத்து டெல்லியிலுள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மாலை 3.55 மணியளவில் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

நிஜாமுதினிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலாதீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு நிஜாம் போத் காட்டில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் அரசியல் சார்பற்ற குடும்பத்தில் 1938 ஆம் ஆண்டு ஷீலாதீட்சித் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கன்னஜ் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நெருக்கமானவராக இருந்த அவர், மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை டெல்லி முதலமைச்சராக பதவி வகித்தார்.

டெல்லியில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்த பெருமை இவரை சேரும். 2013 - 2014 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷீலாதீட்சித் டெல்லி பாஜக தலைவர் மனோஜ்திவாரியிடம் தோல்வி அடைந்தார்.

மெட்ரோ ரயில் இயக்கம், வாகனங்கள் வெளியிடும் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் டெல்லிக்கு நவீன தோற்றத்தை கொடுத்தவர் என்ற பெருமை ஷீலா தீட்சித்திற்கு உண்டு.

ஷீலா தீட்சித் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment