Tamil Sanjikai

பஞ்சாப் மாநிலம் படின்டா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விடுதியில் உள்ள கழிவறையில் சானிடரி நாப்கின்கள் கிடப்பதை பார்த்த விடுதியின் 2 பெண் வார்டன்கள் மாணவிகளிடம் கழிவறையில் யார் சானட்ரி நாப்கின்களை வீசினீர்கள் என்று கேட்டனர். ஆனால் மாணவிகள் யாரும் பதில் கூறவில்லை.

இதையடுத்து நாப்கின் பயன்படுத்தியது யார்? என்று கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்ய முடிவு செய்தனர். 2 பெண் பாதுகாவலர்கள் மூலம் 12 மாணவிகளின் ஆடைகளை சோதனை செய்தனர்.

இந்த செயலினால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்..

ஆனால் பல்கலைக்கழக நிர்வாகிகள் பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த உரிய நடவடிக்கையம் எடுக்காமல், மாணவிகள் கொடுத்த புகாரை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் கூறும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்-மாணவிகள் பேசிக்கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

போராட்டம் நடத்திய மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்த 2 பெண் வார்டன்கள், 2 பெண் பாதுகாவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.

0 Comments

Write A Comment