Tamil Sanjikai

கர்நாடகா மாநிலத்தில் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து அந்த ஏரியில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. ஹுபாளி பகுதியில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள மோராப் கிராமத்தில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் 29-ஆம் தேதி அப்பகுதியில் இருந்த ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஏரி நீரில் எச்ஐவி கிருமி பரவி விட்டதாகவும் அந்த நீரை பயன்படுத்தினால் தொற்று ஏற்படும் என்றும் ஊருக்குள் வதந்தி பரவியது.

ஏரி நீரை குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த கிராம மக்கள் மறுத்துவிட்டனர். எச்ஐவி பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததும் நோய் கிருமியும் இறந்துவிடும் என்றும் உடலில் இருந்து வெளியேறினால் கிருமி செயலற்று விடவும் என்றும் சுகாதாரத்துறையினர் கிராம மக்களிடம் தெளிவாக விளக்கியுள்ளனர். ஆனால் இதை ஏற்று கொள்ள மறுத்த கிராம மக்கள் ஏரி நீரை முற்றிலுமாக வெளியேற்றினால் மட்டுமே அந்த நீரை பயன்படுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதனையடுத்து 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் இருந்து மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

0 Comments

Write A Comment