டெல்லி சாக்தாரா பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளைய மகள் மோனிசா (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் மோனிசாவின் தந்தை, தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே மோனிசா தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். “நான் ஒரு பெண் தோழியை விரும்புகிறேன். அவருடன் தனி வீட்டில் இருக்கிறேன்” என்றார்.
இதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்த அவர், பின்நர் அதற்கு சம்மதம் தெரிவித்து தன் மகளையும் அந்த பெண் தோழியையும் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தார். பெண் தோழியின் வீட்டிலும் அதற்கு சம்மதித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மோனிசாவின் தந்தை தனது அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி மோனிசா கூறுகையில், “என் பெண் தோழியுடன் வாழப்போவதாக என் தந்தையிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பயந்தேன். ஆனால் அவர் அதற்கு சம்மதித்து எங்களை வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு என் தோழி, பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று இரவு நான் உணவு சாப்பிடாததால் என்னை அடித்துவிட்டு அப்பா கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்திற்கு பின் வந்த அவர் தன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டார். பின் துப்பாக்கி சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்” என்றார். மகளின் செயல்பாடு பிடிக்காததால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments