Tamil Sanjikai

தமிழ் மொழிபெயர்ப்பில் தவறு, தமிழர்கள் அதிருப்தி!


இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘statue of unity’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு அதாவது ஒற்றுமையின் சிலை என்று அர்த்தம்.

பட்டேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் statue of unity என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக, தவறான கருத்தாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது. statue of unity என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட சரியான அர்த்தம் கிடைத்திருக்கும். ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் உலகின் பழமையான தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, பெரும் அதிருப்தியை அளித்திருக்கிறது.

0 Comments

Write A Comment