Tamil Sanjikai

கோடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டு வந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ், இந்த சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஏப்ரல் மாதம் கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது, காவலாளி பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர், மர்மமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜும் விபத்தில் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் குறித்து, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சாமுவேல் மேத்யூஸ், புலனாய்வு மேற்கொண்டார், நேற்று டெல்லியில் இந்த புலனாய்வு வீடியோவை வெளியிட அவர் , அதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், புலனாய்வு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமது அமைச்சர்கள் தொடர்பான, ஆவணங்களை கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், இதனை பயன்படுத்தியே, அனைவரையும் அவர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் இந்த புலனாய்வு வீடியோ கூறுகிறது. அதேபோன்று, அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே, இந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 5 கோடி ரூபாய் பெற்றார் எனவும், ஆவணப்படத்தில் கூறப்பட்டிருக்கிறது. சாமுவேல் மேத்யூஸ், தெஹல்காவில் பணியாற்றிய போது, "நாரதா ஆபரேஷன்" என்ற பெயரில், பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தற்போது கொடநாடு மர்மங்களை அவர் புலனாய்வு வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம், தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment