உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, வெளி நபர்களின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வந்ததாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதாக நீதிபதியாக இருந்த குரியன் ஜோசப் உள்ளிட்ட 4 பேர், கடந்த ஜனவரி மாதத்தில் குற்றம்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்தது. இதையடுத்து, தீபக் மிஸ்ரா, கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வுபெற்றார். மேலும், நீதிபதியாக இருந்த குரியன் ஜோசப், கடந்த 29-ஆம் தேதி ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த குரியன் ஜோசப், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, வெளி நபர்களின் கைப்பாவையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். வெளிநபர்களின் ஆதிக்கத்தால், நீதித்துறை நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே, பத்திரிகையாளர்களை மூத்த நீதிபதிகள் சந்தித்ததாகவும், இதனைத் தொடர்ந்து, தீபக் மிஸ்ரா-வின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். எனினும், ஆதிக்கம் செலுத்தியவர்கள் யார், எந்தெந்த வழக்குகளில் தாக்கம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க குரியன் ஜோசப் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, குரியன் ஜோசப் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மூலம், நீதித்துறையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலையீடு இருந்தது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த அவர், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை மற்றும் சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமரும், பாஜக-வும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அபிஷேக் சிங்வி வலியுறுத்தினார்.
0 Comments