உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டைனோசர் சிலை கீழே விழுந்து நொறுங்கியது.
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை அருகே உள்ள ஆற்றுப்படுகையில் 182 மீட்டர் உயரத்தில் “Statue of unity” என்ற பெயரில் இந்தியாவின் இரும்பு மனிதர் என எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை, 2989 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். உலகின் மிகப்பெரிய சிலையான இதை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சிலையைச் சுற்றி பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக 30 அடி உயரத்தில் டைனோசர் உருவ சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 2 கோடி மதிப்பில், இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஒருமாதகாலமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த டைனோசர் சிலையின் தலை முதலில் எதிர்பாராத விதமாக உடைந்து விழுந்தது. அதன் பின்னர் முழு டைனோசர் சிலையும் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
0 Comments