Tamil Sanjikai

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன.

இதில் பாகிஸ்தான் விமானம் தாக்கப்பட்டு விழுந்தது. கிடைத்த விமான பாகங்களை ஆய்வு செய்த இந்திய ராணுவத்தினர், தாக்குதலுக்கு பாகிஸ்தான் விமானப்படை எப்.-16 போர் விமானத்தையும், AMRAAM ஏவுகணையையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இது எப்.16 ரக போர் விமானம் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது

எப்-16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கராவதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி தற்போது எப்16- ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ கூறியதாவது:- “இந்த தகவலை நாங்கள் பார்த்தோம், இவ்விவகாரத்தை உன்னிப்பாக பின்பற்றி வருகிறோம்” என்றார். எப்.16 போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராபர்ட் பல்லடினோ, “ நான் எதையும் உறுதி செய்ய முடியாது. ஆனால், கொள்கைகளின் அடிப்படையில், இருதரப்புக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை நான் வெளிப்படையாகக் கூறக்கூடாது” என்றார்.

0 Comments

Write A Comment