Tamil Sanjikai

கேபிள் மற்றும் DTH சேவையில், விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை TRAI அறிமுகம்செய்தது. இதையடுத்து விரும்பிய சேனல்களை, சந்தாதாரர்கள் தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் புதிய நடைமுறைக்கு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக TRAI தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேபிள் மற்றும் DTH சேவையில் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்யும் முறையை அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் இன்னும் தேர்வு செய்யாமல் இருப்பதினால், புதிய நடைமுறைக்கு மாற மார்ச் 31ம் தேதி வரை சந்தாதாரர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய முறைக்கு சந்தாதாரர்கள் மாறும் வரை, ஏற்கனவே அவர்கள் பயன்படுத்தி வரும் திட்டத்தையே தொடர்ந்து வழங்க வேண்டும் என கேபிள் மற்றும் DTH சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சந்தாதாரர்களின் மொழி, வாழும் பகுதி மற்றும் விருப்பம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உகந்த சேனல்கள் அடங்கிய தொகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேபிள் மற்றும் DTH சேவை நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 கோடி பேர் கேபிள் சேவையையும், சுமார் 6 கோடியே 50 லட்சம் பேர் DTH சேவையையும் பயன்படுத்தி வரும் நிலையில், விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை 65 சதவிகித கேபிள் டிவி சந்தாதாரர்களும், 35 சதவிகித DTH சந்தாதாரர்களும் தேர்வு செய்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment