Tamil Sanjikai

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் 10-ஆம் தேதிவரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். ரயில்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தற்போதைய நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொருட்களை அனுப்பும்போது சரக்கு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து அரசு அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். மற்ற அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர்கள் முடிவுசெய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சரக்குகளை அனுப்புவோரும் பெறுவோரும் மாவட்ட ஆட்சியர் அல்லது உள்ளாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை நோக்கி செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது குறித்து கோட்ட மேலாளர்கள் முடிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களில் உள்ள வழக்கமான சரக்குப் பெட்டிகளுக்குப் பதிலாக, தனி பெட்டிகளில் அனுப்புவது சிறந்தது என்று ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் 10-ஆம் தேதிவரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment