வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது.
இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. கஜா புயல் கேரளாவிற்குள் நுழைந்ததும் இடுக்கியில் மிக கனத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு, மூணாறு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏற்கனவே இங்கு பெருமழை பெய்ததால் சேதமான பாலங்களுக்கு பதில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த பாலங்களை கஜா புயல் தகர்த்துப் போட்டது. இதனால் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இடுக்கியில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது.
தற்போது கஜா புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அமித்தி தீவுகளை கடந்து மினிகாய் தீவு வழியாக வளைகுடா நாட்டுக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சபரிமலை, எரிமேலி, பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளைகுடா நாட்டிற்கு நகர்ந்த பின்னரே கேரளாவில் மழை குறையுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments