Tamil Sanjikai

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2–ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கனகதுர்கா வீட்டுக்குக்கூட செல்ல முடியாமல் போலீஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார். பதற்றம் தணிந்து தனது வீட்டுக்குச் சென்ற கனகதுர்காவை, அவருடைய மாமியாரும், கணவரும் அவரை அடித்து, வீட்டிற்குள் நுழைய விடமால் விரட்டி அடித்தனர்.

அதுமட்டுமன்றி கோயிலுக்குள் நுழைந்து பாவம் செய்துவிட்டாய். எனவே பகிரங்கமாக பொதுஇடத்தில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் என்று அடித்துள்ளனர். அதில் காயமடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவருடைய மாமியாரும் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார்.

இதுதொடர்பாக வீட்டுக்குள் நுழைவதற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் கனதுர்கா வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று அவருடைய மாமியார் சுமதியும், தன் மருமகள் வீட்டுக்குள் நுழையத் தடை விதிக்க நீதிமன்றத்தை நாடினார்.

இந்தநிலையில், கனதுர்கா அவரது மாமியார் வீட்டில் தங்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கனதுர்கா நேற்று மாலை கேரளா மலப்புரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று குடியேறினார்.

இது குறித்து கனகதுர்கா கூறுகையில்,

நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு தான் வீட்டிற்குள் நுழைய முடிந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகளை இன்று என்னால் பார்க்கமுடியவில்லை. அவர்களை அடுத்த முறை பார்க்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்னுடன் தங்க எந்த ஆட்சேபனையும் இல்லை. காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும்.

0 Comments

Write A Comment