Tamil Sanjikai

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவானந்தம், தனது மனைவி அன்னபூர்ணா மற்றும் 10 வயது மகளுடன் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ எஸ்.சி.புதூரில் வசித்து வருகிறார்.

இவர் அந்த பகுதியில் எலெக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்டு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர்களது கடைக்குள் புகுந்த கும்பல் ஓன்று, தம்பதியிடம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட ரூ.1000 நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் கொடுக்க மறுத்ததால், அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர், தம்பதியை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தம்பதியை தாக்கியவர்கள் சிட்கோ முதலிபாளையம் வெள்ளைகரடு திவ்யா காம்பவுண்டை சேர்ந்த விக்னேஷ் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (24), விஜயாபுரம் காசிப்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி (24), அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (32), வசந்த், ரஞ்சித், அய்யாசாமி, நாசர்அலி மற்றும் பலர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இவர்களை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், துரைசாமி, ஏட்டுகள் சர்வேஸ்வரன், முரளி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ், தேவேந்திரன், கருப்புசாமி மற்றும் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வசந்த் உள்பட பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 Comments

Write A Comment