பாராளுமன்றத்தில் நடந்த ரபேல் போர் விமானம் குறித்தான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் விவாதத்திலிருந்து தான் தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி விவாதத்தில் நேரடியாக கலந்து கொள்ளாமல் நிர்மலா சீதாராமனை விட்டு காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்ததற்காக ராகுல் இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி பேசுகையில் “முதல்முறையாக இந்தியாவின் மகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார். இது மிகவும் பெருமையான விஷயம். பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் அமைதியாக்கினார், பொய்யை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்தவர்கள் பெண் பாதுகாப்பு அமைச்சரை அவமானப்படுத்தி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரை மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியையும் அவமதித்துள்ளனர்” என கூறினார். இதனையடுத்து நடுங்காதீர்கள் என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்தார். இதற்கிடையே மோடி பெண்களை வெறுப்பவர், அவமதிப்பவர் என்று டுவிட்டரில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், “ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் கிடையாது, திருநங்கை ஒருவரை கட்சியின் முக்கியமான பொறுப்பில் நியமனம் செய்த அவர் எப்படி பெண்களுக்கு எதிரானவராக இருப்பார். ஏன் அவருடைய கருத்தை பெண்களுக்கு எதிரானது என பார்க்கிறீர்கள்? பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பாராளுமன்றத்தில் பதில் அளிக்கவில்லை, அந்த கோணத்தில் இவ்விவகாரத்தை பாருங்களேன்” என கூறினார்.
0 Comments