புரட்சியாளர் சே குவேராவுக்கும் அவரது 2-வது மனைவி அலெய்டா மார்சுக்கும் பிறந்த 4 குழந்தைகளில் மூத்த மகளான அலெய்டா குவேரா ஜூலை 27ஆம் தேதி இரவு கேரளாவுக்கு வந்தார்.
அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பேபி, மாவட்ட செயலாளர் ஆனவூர் நாகப்பன், கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் சைலஜா, கடகம்பள்ளி சுரேந்திரன், ரவீந்தரநாத் மற்றும் சுனில் குமார் ஆகியோரையும் சந்தித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடனுடம் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து அவர் நாளை கண்ணூரில் மகளிர் குழு ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் 2-ந்தேதி எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில், கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்தும் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
சே குவேரா 60 ஆண்டுகளுக்கு முன்பு கியூபா அமைச்சராக இருந்தபோது அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.
அதன் 60-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த வாரம் கியூபாவில் இருந்து அலெய்டா குவேரா உள்ளிட்ட குழு ஒன்று இந்தியாவுக்கு வருகை தந்தது. இதையடுத்து டெல்லியில் இடதுசாரி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிய அலெய்டா, தற்போது கேரளா வந்துள்ளார்.
0 Comments