Tamil Sanjikai

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை 9 மணிக்கு தொடங்கி, சுமார் 30 நிமிடங்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்பட்டது.

நிலவை தற்போது நீள்வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றி வருகிறது.

வரும் 28, 30, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திரயான்-2 மேலும் நிலவை நெருங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கத் தொடங்கி 1.55 மணிக்கு தரையிறங்கும்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது. துல்லியமான சந்திர சுற்றுப்பாதையில் செருகும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்டது மற்றும் வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 துல்லியமாக புகுத்தப்பட்டது. திட்டமிட்டபடி சந்திரயான்-2 முன்னேறி வருகிறது.

மணமகள் தாய்வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு மாறுவது போல சந்திரயான்-2 பூமியில் இருந்து நிலவுக்கு மாறி உள்ளது. சந்திரயான்-2 திட்டம் இதுவரை திட்டமிட்டபடி முன்னேற்றம் அடைந்து உள்ளது. நாளை முதல் சில நாட்களுக்கு 4 அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும். திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கப்போகிறது.

அடுத்த பெரிய நிகழ்வு செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும். அப்போது லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதி செய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய மாற்றம் செய்வோம் என கூறினார்.

0 Comments

Write A Comment