Tamil Sanjikai

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் ஆந்திர மாநில முன்னாள் உள்துறை மந்திரி சின்ன ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடு இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார்.

ஆனால் விஜயவாடா விமான நிலைய பாதுகாப்பு படையினர் அவருக்கு நேரடியாக செல்லும் வி.ஐ.பி. அந்தஸ்தை தர மறுத்தனர். ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் விமான நிலையத்துக்குள் இனி சிறப்பு சலுகைகள் தர இயலாது. பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி பயணிகளோடு பயணியாக வரிசையில் போய் நின்றார். மற்ற சாதாரண பயணிகள் ஸ்கேன்கருவி கடந்த செல்வது போல அவரும் கடந்து சென்றார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் அவரை முழுமையாக பரிசோதித்தார்.

அதன் பிறகே அவர் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடம் வரை வி.ஐ.பி. வாகனத்தில் செல்ல சந்திரபாபு நாயுடு அனுமதி கேட்டார். ஆனால் அந்த சலுகையையும் பாதுகாப்பு படையினர் தர மறுத்து விட்டனர்..

எல்லா பயணிகளையும் போல அவரும் பயணியோடு பயணியாக விமான நிறுவனத்தின் பஸ்சில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தராததற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்தவரை சந்திரபாபு நாயுடு தனி அந்துஸ்துடன் நாடு முழுவதும் உலா வந்தார். பாரதீய ஜனதாவை பிரிந்த பிறகு ஆட்சியையும் பறிகொடுத்து விட்டு தற்போது செல்வாக்கு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

0 Comments

Write A Comment