Tamil Sanjikai

சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலேயே இன்றைய அலுவல்கள் முடியும் வரை ஒரு மூலையில் அமர்ந்திருக்குமாறும் நாகேஸ்வரராவுக்கு அதிரடியாக தண்டனை விதிக்கப்பட்டது.

பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதேபோல, பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சிபிஐ சேர்த்து விசாரிக்க கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மாவை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதை மிகவும் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்த நீதிபதிகள், ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, நாகேஸ்வரராவ் உச்சநீதிமன்றத்தில் நேற்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தபடி இன்று நேரிலும் ஆஜராகி, தமது மன்னிப்பை ஏற்கும்படி கேட்டார்.

வேலைப்பளுவின் காரணமாக தவறு நேர்ந்திருக்கலாம் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுவதோ அவமதிப்பதோ தமது நோக்கம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஆனால் நாகேஸ்வரராவின் மன்னிப்பை ஏற்கமறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பை அவர் செய்திருப்பதாகவும், அவரது பணிக்காலத்தில் இது கரும்புள்ளியாக அமையும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.

எவ்வித கரும்புள்ளிகளும் இல்லாமல் 32 ஆண்டுகாலம் நாகேஸ்வரராவ் பணியாற்றி இருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் கருணையும் கூடிய அணுகுமுறைய கடைப்பிடிக்குமாறும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கேட்டுக்கொண்டார். ஆனாலும் நாகேஸ்வரராவுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், நீதிமன்றம் அலுவல்கள் முடியும் வரை ஒரு மூலையில் சென்று அமருமாறு நாகேஸ்வரராவுக்கு உத்தரவிட்டனர்.

0 Comments

Write A Comment