மகாராஷ்டிரா மாநிலம், கங்கௌலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நிதீஷ் ராணே, தமது ஆதரவாளர்கள் சிலருடன், மும்பை - கோவா மாநில நெடுஞ்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாய் இருந்ததால் எம்எல்ஏ மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.
அவரது ஆத்திரத்தை உணர்ந்த அவரது ஆதரவாளர்கள், சாலையை ஏன் முறையாக பராமரிக்கவில்லை என, நெடுஞ்சாலை துறையின் துணைப் பொறியாளர் பிரகாஷ் ஷிடேகரிடம் கேட்டவாரே, அவர் மீது செம்மண் கலந்த தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். அத்துடன் அவரது கைகளை கயிறால் கைட்டியும் தாக்கியுள்ளனர்.
"இந்த சாலையில் தினமும் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை அரசு அதிகாரிகளுக்கு இப்படிதான் உணர்த்த வேண்டும்" என எம்எல்ஏ ஆதாரவாளர்கள் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளனர்.
"கங்கௌலி தொகுதியில் சாலையை சேறும் சகதியுமாக தான் வைத்திருக்க வேண்டுமென உனக்கு யார் சொன்னது? என எம்எல்ஏ நிதீஷ் ராணேவும், இன்ஜினியரை பார்த்து ஆவேசமாக கேட்டுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அத்துமீறய செயல்கள் அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ நிதீஷ் ராணே மீது, கங்கௌலி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0 Comments