Tamil Sanjikai

2007-ம் ஆண்டில், புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த இளம்பெண் ஒருவரை இரவு பணி முடிந்து நிறுவனத்தின் ஒப்பந்த காரில் வீடு திரும்பும் போது கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கற்பழித்து கொன்ற வழக்கு நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டரில் பெண் ஊழியர் ஒருவர் இரவு பணி முடிந்து திரும்பினார். அப்போது கார் டிரைவர் புருசோத்தம் போரடேயுடன், அவரது நண்பர் பிரதீப் கோகடேயும் பயணித்தார்.

அவர்கள் இளம்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் புறநகர் பகுதிக்கு காரை ஓட்டிச்சென்றனர். பின்னர் அந்த பெண் ஊழியரை கொடூரமாக கற்பழித்தனர். பின்னர் அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கார் டிரைவர் புருசோத்தம் போரடே மற்றும் பிரதீப் கோகடே ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் இருவரின் மீதும் புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டும், 2015-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தன.

இதையடுத்து அவர்கள் மராட்டிய மாநில கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் கருணை மனுக்கள் அனுப்பினர். 2016-ம் ஆண்டு கவர்னரும், 2017-ம் ஆண்டு ஜனாதிபதியும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து அவர்களை வருகிற திங்கட்கிழமை (24-ந் தேதி) தூக்கில் போட புனே செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

அந்த மனுவில், தங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அதிகப்படியான கால தாமதம் செய்யப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1509 நாட்கள் தாமதம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான துன்பத்தையும், மன ரீதியான வேதனையையும் அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அதிகப்படியான தாமதத்தால் எங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளன. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி தர்மாதிகாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஸ் கும்பகோனி, குற்றவாளிகளின் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் எந்த தாமதமும் செய்யப்படவில்லை என்றும், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தான் காலஅவகாசம் எடுத்து கொண்டதாகவும் வாதிட்டார்.

மேலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டு, அதை ஆயுள் தண்டனையாக குறைத்தால், இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடியும் என்றும் அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 ஆவணங்களை தங்களுக்கு தரவில்லை என்றும், இதனால் வழக்கில் போராட தங்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார். அந்த ஆணவங்களை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 16-ந் தேதி மத்திய தகவல் ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகளை தூக்கில் போட ஏற்கனவே தேதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்கள் வழக்கில் போராட போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மனுதாரர்கள் கேட்ட ஆவணங்களை வழங்க விருப்பம் உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் கோர்ட்டு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்றும், மீண்டும் வழக்கு விசாரணை வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்றும் நீதிபதி தர்மாதிகாரி உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment