Tamil Sanjikai

ட்ராய் நிறுவனத்தின் புதிய கொள்கை கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை இன்று நிறுத்தி வைத்துள்ளது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம்.

இந்தியாவில், சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் கேபிள் டிவி சேவையை தான் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்ராய் நிறுவனம், புதிய 8வது கொள்கை கட்டளையை முன்வைத்தது. அதனடிப்படையில், பொதுமக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய கொள்கை கட்டளையால், பெரும் நிறுவனங்கள் மட்டுமே பயன்படும் என தெரிவிக்கும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு, இதனை எதிர்க்கும் விதமாக போராட முடிவு செய்து நாடு முழுவதும் இன்று கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கு முன்னர், பல சேனல்களை 200 ரூபாய்க்கு கொடுத்து வந்துள்ளனர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள். ஆனால், தற்போதைய ட்ராய் அறிவிப்பின்மூலம், 200 ரூபாய் செலவிடுவதற்கு பதில் 600 ரூபாய் செலவிட நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிக கட்டணம் பெறும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமே இந்த புதிய கட்டளையால் பயன்பெற முடியும் என்று கூறியும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம் போராடி வருகிறது.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த சேவை நிறுத்தத்தில், தமிழகத்தை சேர்ந்த 29 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லையெனில், சென்னையில், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment